வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ரெட் அலர்ட் காரணமாக கடந்த இரண்டு நாள் பெய்த கனமழை மற்றும் கடுமையான கடல் சீற்றத்தால் பல்வேறு மீனவ கிராமங்களில் கரையரிப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளக்கோயில் கிராமத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட கடல் அரிப்பால் 10 அடி தூரம் கரை உள்வாங்கியது. இதில் மீனவர்களின்
பொது நிதியில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஆறு மின்சார கம்பங்களில் 5 மின்சார கம்பங்கள், 5 சிசிடிவி கேமராக்கள் கடல் அரிப்பு காரணமாக முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. படகுகளை மீனவர்கள் கரையில் இருந்து 50 அடி தூரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ள நிலையில் கடல்நீர் கரையைத் தாண்டி உட்புகுந்து படகுகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் கடல் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அருகில் தரங்கம்பாடி துறைமுகம் அமைக்கப்பட்டதால் கடல் அரிப்பு தங்கள் பகுதியில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் கடல் அரிப்பால் தற்போது வரை 100 அடி தூரம் கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் அலை தடுப்பு சுவர் அமைத்துத் தந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.