சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். புதிய திறமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கனிமொழி கருணாநிதி எம்.பி தமிழ்நாடு அரசு மற்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் சென்னையில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் தைத் திங்கள் பொங்கல் விழாவினையொட்டி நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் இணைந்து சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சி நடைபெறும்.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது X தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில், நவம்பர் 30, டிசம்பர் 1 & 7,8 தேதிகளில் மண்சார் பாடகர்கள், கர்நாடக இசைப் பாடகர்கள், கிராமிய இசைக்கலைஞர்கள், தாள வாத்தியக்கலைஞர்கள், கிராமிய நடனக் கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடைபெறவுள்ளது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் மற்றும் முன்பதிவு செய்யத் தொலைப்பேசி எண்ணும் 9841048624 கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி, கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கனிமொழி ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ (Chennai Sangamam) என்ற பெயரில் கலை பண்பாட்டுத் திருவிழாவைச் சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்து 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 2022-ல் இருந்து சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.