அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராசேந்திரசோழனால் சோழர்களின் தலைநகராக அமைக்கப்பட்டது.தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை இவ்வூருக்கு உண்டு.
உலகச்சுற்றுலாத் தலமாகவும் உள்நாட்டு மக்களின் வரலாற்று சின்னமாவும் வழிபாட்டுத் தலமாகவும் கங்கைகொண்டசோழபுரத்து பிரகதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது. அரசிற்கு சுற்றுலா வழியாகவும் உள்நாட்டு பக்தர்கள் மூலமும் வருவாயையும் ஈட்டித்தருகிறது. 2017-ல் எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து இக்கோவிலுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றிர்க்கு இராண்டாயிரம்
வரை உயர்ந்துள்ளது.
இக்கோவில் பராமரிப்பு இந்தியத்தொல்லியல்துறையிடம் உள்ளது. அதன் திருச்சி அலுவலகத்தால் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.
சிறப்பிற்குரிய இத்திருக்கோவில் இரவில் போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இக்கோவில் பசுமை வெளியால் சூழப்பட்டிருப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் மற்றும் தேனீக்களின் தாக்குதல் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
பலமுறை இந்தியத்தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு இந்த இன்னல் பற்றி நேரிலும் கடிதம் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய சுற்றுலாத்துறை இக்கோவிலுக்கு மின்விளக்குகள் பொருத்தி இருள் நீக்க முன்வந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில்போல இந்த கோவிலையும் பராமரிக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக
ஒளிவெள்ள (flood light illumination) மின்விளக்கு அமைப்பை அமைத்து தரவேண்டும். தவறும் பட்சத்தில் மாநில மத்திய அரசைக் கண்டித்து கங்கைகொண்ட சோழபுரம் மக்களும் பொதுமக்களும் வரலாற்று ஆர்வலர்களும் இணைந்து எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் பெரும் மக்கள் திரள் அறப்போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழும தலைவர் ஆர். கோமகன் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.