அரியலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதனன். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அப்போது சிங்கப்பூரில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மியான்மர் நாட்டை சேர்ந்த ஏய் ஏய் மோ என்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரில் பெண் பார்ப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து தனது காதலை மதிவதனன்
பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து கடந்த 17 ம் தேதி இருவரும் ரசலாபுரம் கிராமத்திற்கு வந்தனர்.
இவர்களுக்கு அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அப்போது உற்றார் உறவினர்கள் முன்னிலையில் மணப்பெண் ஏய் ஏய் மோ கழுத்தில் மதிவதனன் தாலி கட்டினார். மணமகள் தமிழ் முறைப்படி பட்டுசேலை அணிந்து இருந்தார்.மணமகன் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.
மணப்பெண்ணின் குடும்பத்தாருக்கு விமான டிக்கெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது மகளின் திருமணத்தை வீடியோ கால் மூலமாக பார்த்தனர். பின்னர் வீடியோ காலில் இருந்த தனது தாயின் முன்மணப்பெண்ணும் மணமகனும் செல் போன் முன்பு தரையில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அப்போது மணமகள் மகிழ்ச்சியில் கண்கலங்கி நின்றது குறிப்பிடத்தக்கது.