இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும். வரும் 30-ம் தேதி இந்தப் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் – புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.