அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 25 வருடங்களாக
சென்னை வியாசர்பாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் செல்வராஜ் மாநில முடிதிருத்துவோர் சங்க தலைவராகவும் உள்ளார். செல்வராஜ் தனது மகன் விக்னேஷுக்கு கடந்த 20 ஆம் தேதி ஜெயலட்சுமி என்பவரை சென்னையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணம் முடிந்த கையுடன் தனது பூர்வீக கிராமத்திற்கு தனது மனைவி மாலதி, மகன் விக்னேஷ் மருமகள் ஜெயலட்சுமி, ஆகியோரை அழைத்துக் கொண்டு செல்வராஜ், இரு தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் மகள் புனித வள்ளியை அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற இவர்கள் நான்கு பேரும் இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் வழிபாடு செய்வதற்காக கடம்பூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். செல்வராஜ் உடன் மனைவி மாலதி, மகன் விக்னேஷ், மருமகள் ஜெயலட்சுமி, மகள் வயிற்று பேரக்குழந்தைகள் குழந்தைகள் தினேஷ், சகானா ஆகிய ஆறு பேரும் பயணம் செய்துள்ளனர். கடம்பூரில் இருந்து தஞ்சாவூர் சென்றபோது, ஏலாக்குறிச்சி ஆர்ச் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரை ஓட்டிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் விக்னேஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் செல்வராஜின் மனைவி மாலதி, மருமகள் ஜெயலட்சுமி மற்றும் மகள் வயிற்று பேரக்குழந்தைகள் தினேஷ், சகானா ஆகிய நான்கு பேரும் காயம் அடைந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணமான 7வது நாளில் ஜெயலட்சுமி தனது கணவர் விக்னேஷை தனது கண்ணெதிரே விபத்தில் பலி கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.