சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது மனைவி மாலதி, மகன் விக்னேஷ், மருமகள் ஜெயலட்சுமி, குழந்தைகள் தினேஷ், சகானா ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் வந்தனர். பின்னர் கோவிலில் இருந்து கடம்பூர் வழியாக தஞ்சாவூர் சென்றுள்ளனர். காரை செல்வராஜ் ஓட்டி சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதியது.
இதில் காரை ஓட்டிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் விக்னேஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் செல்வராஜின் மனைவி மாலதி, மருமகள் ஜெயலட்சுமி மற்றும் பேரக்குழந்தைகள் தினேஷ், சகானா ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.