கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ரகுவரன். வழக்கறிஞரான இவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும், பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் லோட்டஸ் ஸ்பா இயங்கி வருகிறது. இதேபோல் நான்கு இடங்களில் ஸ்பா இயங்கி வருகிறது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார். சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பாவை இழுத்து மூடி, அதை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததோடு, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா ஸ்பா நடக்கும் இடங்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ரெயின்போ ஸ்பா, ஓஜாஸ் ஸ்பா, க்ரீன் ஸ்பா ஆகியவை இழுத்து மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. அந்த மூன்று இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
இதேபோல், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த கல்கி என்ற ஸ்பா சீல் வைத்து மூடப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வந்த கல்கி ஸ்பாவை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஸ்பாவினை இழுத்து மூடி விட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.