தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான , தூய தமிழ் இயக்கத்தின் தந்தை என போற்றப்பட்ட மறைமலை அடிகளார் மகன் மறை.பச்சையப்பன். இவருடைய மகள் லலிதா ( 42). பி.காம். பட்டதாரியான இவர் தஞ்சை கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் செந்தில்குமார், மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும் என மனு அளித்தார். மேலும் மகளிர் உரிமைத்தொகை கேட்டும் மனு அளித்தார்.
இது குறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வறுமையில் வாடும் தமிழ்தந்தை மறைமலைஅடிகளார் பேத்தி லலிதா குடும்பத்திற்கு அ.தி.மு.க. சர்பில் ரூ.1 லட்சம் குடும்ப நல நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து இதற்கான காசோலையை மறைமலை அடிகளார் பேத்தி லலிதா, அவருடைய கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் தஞ்சை மாநகர அ.தி.மு.க. செயலாளர் சரவணன் வழங்கினார். அப்போது பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, மனோகரன், மகளிரணி சித்ராஅங்கப்பன், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடராஜன், நிர்வாகிகள் செந்தில், வடிவேல், ஜெகதீசன், ரவிச்சந்திரன், ஜெயபால், வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை பெற்றுக்கொண்டே லலிதா கூறுகையில், நான் வறுமையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.இதனை அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் இதனை மறக்க மாட்டேன் என்றார்.