ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இரவு ஊட்டி – கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கமிஷனரின் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த கணக்கில் வராத பணம் 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் 25ம் தேதி ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்படுவதாக உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் ஈரோடு மாநகராட்சி உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராகவும், கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, ஊட்டி நகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷாவுக்கு இரண்டு வாரத்தில் புதிய பணி ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..