மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜக மேலிடம் பட்னாவிசை முதல்வராக்க முடிவு செய்தது.அஜித் பவார், ஷிண்டே ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை பட்னாவிஸ், ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். அப்போது ஷிண்டே தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார். புதிய முதல்வர் தேர்வு செய்யப்படும் வரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இன்று மும்பையில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் பட்னாவிஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக(முதல்வர்) தேர்வு செய்யய்படுவார் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் அந்த கடிதத்துடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தெரிகிறது. எனவே நாளை மகாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.