தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இன்று, வடமேற்கு திசையில் தமிழகம் – இலங்கையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும். இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகன மழை, அதாவது, 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது.. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பூமத்திய ரேகை பகுதியில் உருவாகும் இது போன்ற நிகழ்வுகள், அங்கிருந்து விடுபட்டால் தான், அதன் போக்கு குறித்து துல்லியமாக கணிக்க முடியும். பூமத்திய ரேகை பகுதியில் மேல்நோக்கி வரும், எம்.ஜே.ஓ., எனப்படும் வெப்ப மண்டல காற்று மற்றும் அழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வருகிறது. அதே நேரத்தில் எதிரெதிர் காற்றும் வீசுகிறது. அங்கிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் விடுபட்டு, நிலத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் போது தான், அதன் தாக்கம் மற்றும் போக்கு குறித்து, மேலும் கணிக்க முடியும். இதன் நகர்வால், கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர் மழை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர் மழை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர்கள் ரத்துசெய்யப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.