ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் கடந்த 2017-18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஐ.ஜியாக பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி காவல்துறையில் புகார் அளித்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை அடுத்து முருகன் மீது பெண்கள் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணைக்காக ஒருமுறைகூட ஆஜராகாத நிலையில் முருகன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இரு நாட்களுக்கு முன்பாக அதிரடியாக உத்தரவிட்டது.
பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட்டில் கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முருகன் இன்று ஆஜரானார். அப்போது தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு முருகன் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து பிடிவாரண்டை ரத்து செய்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுல்தானா அர்ஃப்பின் வரும் 26ம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி.முருகன் மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்