தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரைசந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம் சிறுகமணி அருகே காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறை சிப்காட் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுப்பது சம்பந்தமாக சமிபத்தில் விவசாயிகளுடன், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் தடுப்பணை கட்டிய பிறகு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென்றாலும் குடிநீருக்காக எடுத்துச் செல்லலாம் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், தடுப்பணை கட்டாமல் முசிறி ஆமூர் வரை பிறபகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரியில் தண்ணீர் எடுத்ததால், சுமார் 20 ஆயிரம் தென்னை மரங்களும், 10 ஆயிரம் பனை மரங்களும் காய்ந்து விட்டன .
சிறுகமணி விவசாயிகளின் கோரிக்கையான தடுப்பணையை பற்றி சிந்திக்காமல், காவல்துறையினரின் துணையுடன் அரசு ஒப்பந்தக்காரர் மணல் திருட்டில் ஈடுபட்டுவருகிறார்.
கடந்த 8ம் தேதி முதல் ஆயிரம் மூட்டை சிமெண்ட் கலவைக்கு தேவையான மணலை திருடி, ஆழ்துளை கிணற்றை கட்டியுள்ளனர். அத்துடன் அகஸ்தீஸ்வரர் கோவில் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்..
திருச்சி கம்பரசம்பேட்டை அருகில் காவிரி ஆற்றில் கட்டியுள்ள தடுப்பணை போல கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளுக்கு மன வருத்தத்தை வேதனை அளிக்கிறது. எம்.சாண்டை பயன்படுத்தாமல் அரசை ஏமாற்றி மணல் திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.