அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஒரு வாரத்தில்இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்து தனி அணியாக செயல்படுகிறார். இந்த நிலையில் சூர்யமூர்த்தி என்பவர் அதிமுக பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது என கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், ஐகோர்ட்டுக்கு தெரிவித்துள்ள தகவலில், இரட்டை இலை யாருக்கு என்பது அடுத்த வாரம் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும் என கூறி உள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முடிவு இந்த வழக்கில் உத்தரவாக பிறப்பிக்கப்படும்.