Skip to content
Home » தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல்  வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து சப்– இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில், போலீசார் ரோந்து சென்ற போது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை மூன்று பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

போலீசார்ல அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பரமராஜ் (34),  பேராவூரணி  அடுத்த  காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும்  கைது செய்து  விசாரித்தனர்.

இதில், தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர்,  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளி பகுதியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இதற்கு, தனது நண்பரான அண்ணாதுரை (44) என்பவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரிய வந்தது.

ஆந்திராவில் இருந்து  லாரி டிரைவர் பரமராஜ் மூலம் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி அதை லாரியின் அடியில் பொருத்தி அதில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியுள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் பகுதி வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை  பயன்படுத்தியுள்ளனர். லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும்  பின் தொடர்ந்து வந்துள்ளது.

திருச்சி,தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி, பேராவூரணியில் வந்து கஞ்சாவை காரில் மாற்றி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 330 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல பணி நேரம்  நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து தஞ்சாவூர் விளார் ரோடு கருப்பையா மற்றும் தஞ்சை அருகே புதுப்பட்டினம், தில்லைநகரில் உள்ள அவரது உறவினர் ரகுநாதன் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார்  நேற்று  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம்  ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து ரூ.37.50 லட்சம் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!