ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி இந்த கோரிக்கையை நீதிபதிகளிடம் வைத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- இடைக்கால பொதுச்செயலாளர் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மனுக்கள் ஏற்கனவே விசாரித்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து உள்ளனர். பொதுக்குழு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட (இரட்டை இலை சின்னம் கோரி) வேட்புமனுவையும், தீர்மானங்களையும் தற்போதைய சூழலில் ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், இடையீட்டு மனுவையும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது நீதிபதிகள், ‘வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ன? என கேட்டனர். இதற்கு மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், ‘வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந்தேதி கடைசி நாள்’ என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள். அது தொடர்பாக நாங்கள் முடிவு எடுக்கிறோம். இதனிடையே பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டால், இடையீட்டு மனுவை விசாரிக்க அவசியம் இருக்காது. 30-ந்தேதி (நேற்று) மீண்டும் முறையிடுங்கள்’ என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது அவர்கள் ‘இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதில் எதிர்மனுதாரராக தேர்தல் ஆணையத்தை சேர்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று முறையிட்டனர். 3 நாட்களுக்குள் பதில் அப்போது நீதிபதிகள், ‘எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றி அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும், தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க கோரியும் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த இடையீட்டு மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிடுகிறோம். விசாரணையை பிப்ரவரி 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட வேட்பு மனுவை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதற்காகவே அந்த அணியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.