அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் நவம்பர்-1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கலந்துகொண்டார்.
கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்ததாவது…
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் -2024-25, கிராம வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி அதனை செயல்படுத்தி கொள்ளும் வாய்ப்பினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளாகும். அதனை நினைவு கூறும் வகையில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில் இன்றையதினம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு, வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை கிராம சபைக் கூட்டங்களின் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கழிவறை வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் சுகாதார நலனை கருத்திற்கொண்டு திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க இயலும். அதேபோன்று குடிநீர் வசதிகள் முறையாக பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடவேண்டும். மேலும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு, குடிநீரின் தரம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அரசின் திட்டங்கள், திட்ட செயலாக்கங்களில் பொதுமக்களும் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இக்கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
பின்னர், சிறப்பாக பணியாற்றிய கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பொன்னாடை போற்றி வாழ்த்துத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குருவாலப்பர்கோவில் வடக்கு கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், குருவாலப்பர்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் முல்லைநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.