கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை சீரமைக்காமல் உள்ளது. நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் இந்த தார் சாலை முழுவதுமாக பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து கடந்த மூன்று மாதமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத
காரணத்தினால் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று தென்னிலை பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். சாலை பழுதடைந்த பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி 10-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் ராஜா கூறுகையில்: கடந்த மூன்று மாதங்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து உள்ளோம். தார்சலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் உள்ளாட்சி மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையைகளை அரசிடம் ஒப்படைத்து எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினார்.