தமிழ்நாடு, கேரளாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி போட்டியிட்டார். அவர் உபியில் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். எனவே வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அங்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுலில் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொக்கேரி, பாஜக சார்வில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பம் முதல் பிரியங்கா வெற்றி முகத்தில் இருந்தார். பகல் 12 மணி அளவில் கிடைத்த தகவலின்படி பிரியங்கா காந்தி சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். 2ம் இடத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரும்(1,54,188), 3ம் இடத்தில் பாஜக(82,143) வேட்பாளரும் உள்ளனர்.
2024 பொதுத்தேர்தலில் வயநாட்டில் ராகுல் காந்தி 6,47,445 ஓட்டுகள் பெற்றார். இவர் இந்திய கம்யூ வேட்பாளர் ஆனி ராஜாவை 3, 64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெறுவாா் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.