கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.
கரூர் ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில் வண்டிகள் வந்து செல்கின்றன இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கரூர் வழியாக பயணம் செய்து வருகின்றனர்.
கரூர் ரயில் நிலையத்திற்கு வருகின்ற பொதுமக்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களை வீடுகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். ஆட்டோ வாடகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் வரை சென்று மினி பேருந்துகள் மற்றும் அரசு நகரப் பேருந்துகளையும் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, அடிக்கடி மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று காலை கரூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று இரு தரப்பினரிடையே நிலவிய போட்டியின் காரணமாக இரண்டு மினி பேருந்துகளுக்கு முன்பு, ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக பயணிகளை வைத்துக்கொண்டு பேருந்து ஓட்டுனர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த பிரச்சனை சுமார் 15 நிமிடம் தொடர்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பிரச்சனை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதால், இரு தரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.