Skip to content
Home » மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 43 தொகுதிகளில் நவம்பர் 13-ல் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 64.85% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து 12 மாவட்டங்களின் 38 தொகுதிகளில் நவம்பர் 20-ல் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.59% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 29,563 வாக்குச் சாவடிகளில் பதிவான அனைத்து வாக்குகளும் மொத்தம் 23 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன.

இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 66.05% வாக்குகள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்பட உள்ளன.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும். இதனையடுத்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை முடிவுகள் தொடர்ந்து வெளியாகும்.

இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் எனவும் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஓரிரு எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!