தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் தம் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அரியலூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து கீழப்பழுவூர் ஊராட்சியில்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை பார்வையிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை, குடியிருப்பவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன் குடியிருப்பில் உள்ள வசதிகள் குறித்தும் குடியிருப்பவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணையினை பார்வையிட்டு பல்வேறு பயிர்கள் நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கீழப்பழுர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உடனிருந்தனர்