தஞ்சாவூர் பூக்காரத் தெரு விளார் சாலையில் அமைந்துள்ள மாரிக்குளத்தில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடுதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
தஞ்சாவூர் பூக்கார தெரு விளார் சாலையில் அமைந்துள்ளது மாரிக்குளம் சுடுகாடு. இந்த சுடுகாட்டை பராமரித்து நந்தவனமாக மாற்ற சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவினர் அங்கு இருந்த தேவையில்லாத செடி, கொடிகளை அகற்றி சமாதிகளுக்கு வர்ணம் தீட்டி பல வகையான மரக்கன்றுகள் நட்டு நந்தவனமாக மாற்றி உள்ளனர்.
தற்போது இங்கு உள்ள மாரிகுளம் நன்கு தூர்வாரப்பட்டு அதில் குழாய்கள் அமைக்கப்பட்டு போர்வெல் வாயிலாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. சுடுகாடு என்பதை மாற்றி தற்போது இது நந்தவனம் போல் காட்சியளிக்கிறது. இதை தொடர்ந்து இந்த மாரிக்குளத்தில் மீன் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த குளத்தில் மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை இன்று நடைபெற்றது.
தண்ணீர் நிரப்பப்பட்ட மாரிக்குளத்தில் மேயர் சண். ராமநாதன் மீன் குஞ்சுளை விட்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மேலும் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், விளார் ஊராட்சித் தலைவர் மைதிலி சோம ரத்தினசுந்தரம், முன்னாள் ஊராட்சித்தலைவர் தம்பி (எ) சோமரத்தினசுந்தரம், மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் வைஜயந்தி மாலா முருகேசன், முன்னாள் கவுன்சிலர் சண்முக பிரபு, மா.கம்யூ. (எம்.எல்) ராஜேந்திரன் ஆகியோரும் மீன்குஞ்சுகளை குளத்தில் விட்டனர். குளத்தில் 2 ஆயிரம் ரோக் கெண்டை, 2 ஆயிரம் கண்ணாடி கெண்டை, 2 ஆயிரம் புல்லுகெண்டை, 500 பாப்பு கெண்டை, 500 ஜிலேபி கெண்டை என மொத்தம் 7 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். ஏற்பாடுகளை மாரிக்குளம் சுடுகாடு சீரமைப்பு குழுவினர் செய்திருந்தனர்.