மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக். 23 வயதான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முகமது காஷிப் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்தில் உள்ள தேனிலவு செல்வதற்கு புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் மற்றுமொரு தம்பதியும் தேனிலவிற்கு சென்றுள்ளனர்.
தேனிலவிற்கு சென்ற தம்பதிகள் மாதேரனில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில், முகமது காஷ்யப், அவரது மனைவி மற்றும் இவர்களுடன் சென்ற மற்ற தம்பதிகள் இருவரும் குதிரை சவாரி செல்ல ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக நான்கு பேரும் ஆளுக்கொரு குதிரையில் ஏறி அமர்ந்துள்ளனர். அனைவரும் குதிரையில் சவாரி செய்துள்ளனர்.
அப்போது, முகமது காஷ்யம் சென்ற குதிரை மட்டும் மிகவும் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய முகமது காஷ்யப் பின்னோக்கி கீழே விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காஷ்யப்பின் மனைவி மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர்.
அவர்கள் உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அருகில் இருந்த ஆஸ்பத்ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரது காயம் தீவிரமாக இருந்ததால் அவரை உல்ஷாநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கேட்ட அவரது மனைவி கதறி அழுதது மருத்துவமனையில் இருந்த அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது.
தேனிலவுக்கு சென்ற இடத்தில் குதிரையில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவிற்கு வருபவர்கள் குதிரை சவாரி செய்யும்போது தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.