அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், சீனியர் மருத்துவர்கள் அவசியம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் T. தண்டபாணி தலைமையில், ஒன்றிய செயலாளர் து. பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ந. கோவிந்தசாமி, K. சிவகுமார், S.V. பிச்ச பிள்ளை, R.பானுமதி, பெ. பார்த்திபன், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை, மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மக்கள் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டனர்.
அரியலூரில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சாதாரண ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு தினசரி நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர். அனுபவமிக்க சீனியர் மருத்துவர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் உரிய தகுந்த சிகிச்சை கிடைக்காமல் சிகிச்சை நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்தினால் வரும் நோயாளிகள் தஞ்சாவூர் போய் விடுங்கள் என்று அனுப்பப்படுகின்றனர். வழியில் மரணத்தை சந்திக்கும் துயர சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது. கண் துடைப்பாக நடைபெற்று வரும் இச் சிகிச்சை போக்குகள் கைவிடப்பட வேண்டும். அங்கு அவசியம் சீனியர் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உறுதிப்படுத்திட வேண்டும்.
அரியலூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே சலவை குட்டை தென் புறம் மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் அரசின் மதுக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்திட வேண்டும்.
அரியலூர் அரசு மருத்துவமனை சாலையில் பயன்பாட்டிற்கு வந்துள்ள மேம்பாலத்தின் இருபுறமும் பொதுமக்களின் இன்றியமையா தேவைக்கான சர்வீஸ் சாலை இன்னும் முழுமையாக அமைக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், குண்டும் குழியுமாக கிடக்கும் இந்த சாலையை கடந்து ரயில்வே நிலையம் மற்றும் நகரத்தின் பல தெருக்களுக்கு செல்ல வேண்டியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதை தவிர்க்கும் வகையில், விரைந்து தரமாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும்.
பணி ஓய்வு பெற்ற நாகமங்கலம் கிராமம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் S. V. பிச்சபிள்ளக்கு பணிக்காலத்தில் வழங்கப்படவேண்டிய ஊதியத்தை குறைத்து வழங்கியதால், வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரூபாய்-58,460/ஐ உடன் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தனித்தனியாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி, உரிய ஏற்பாடுகள் செய்வதாக கூறினார்.