பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒட்டுமொத்த உலகுக்கும் உணவு படைக்கும் கடவுளர்களான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21 ம் நாள் சனிக்கிழமை திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் நிறுவனரான நான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மற்றும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள்பேரியக்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை மற்றும் சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டின் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநில மாநாட்டில் அரசியல், சமூக வேறுபாடுகளைக் கடந்து, விவசாயிகள் என்ற ஒற்றைப் போர்வையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.