தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தென்சென்னை மணல் லாரி உரிமையாளர் நலச்தலைவர் மயிலை செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் ராஜசேகர்….. தமிழகத்தில் மணல் குவாரிகள் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். ஆற்றுப்படுகையில் மணல் விலை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விற்கப்படும் என கூறிய நிலையில் தற்போது ஒரு யூனிட் 4000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த விற்பனை அரசுக்கு தெரிந்து நடக்கிறதா என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது ஒரு லாரிக்கு நான்கு யூனிட் மணல் ரூபாய் 16,000 க்கு குத்தகைக்காரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இந்த கடும் விலையால் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து கடுமையான சூழ்நிலையில் இருந்து
வருகிறோம். இதுகுறித்து பொதுப்பணித்துறை தெரிவித்து இருந்தும், குவாரி குத்தகைக்காரர்களிடம் பேசியும் எந்தவொரு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, இதனை கண்டித்து விரைவில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து அனைத்து மணல் குவாரிகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.