நடிகை நயன்தாரா, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதியுள்ள கடிதம் தமிழ் திரையுலகில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. தனது கடிதத்தில், “Schadenfreude” என்ற ஜெர்மானிய வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன? நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தின் டிரெய்லரில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில நொடி காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ். தனுஷுக்கு நயன்தாரா எழுதிய பகிரங்க கடிதம்: நானும் ரௌடிதான் பட பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆகியும் அனுமதி தராத தனுஷ், ட்ரெய்லர் வந்தபிறகு நோட்டீஸ் அனுப்பியதால் கடும் கோபமடைந்த நடிகை நயன்தாரா, தனுஷுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது எனத் தெரிவித்துள்ளார் நயன்தாரா. ஜெர்மன் வார்த்தை: மேலும், “கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக வேண்டிக் கொள்கிறேன்.
இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மானிய மொழியின் “Schadenfreude” எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துகொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. நயன்தாரா, தனுஷுக்கு கூறியுள்ள வார்த்தையின் பொருள் என்ன?: தனுஷுக்கு நயன்தாரா கூறியுள்ள “Schadenfreude” என்பது ஒரு ஜெர்மன் மொழி வார்த்தை. இதன் அர்த்தம், மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு நாம் சந்தோஷப்படுவது அல்லது மன திருப்தி கொள்வது. Schadenfreude என்ற இந்த வார்த்தை இரண்டு ஜெர்மன் சொற்களை ஒருங்கிணைத்து அர்த்தம் தருகிறது. Schaden என்றால், “தீங்கு” அல்லது “சேதம்” என்று பொருள். Freude என்றால் “மகிழ்ச்சி” அல்லது “இன்பம்” என்று பொருள். அதாவது, மற்றவர்கள் சிரமங்களைச் சந்திப்பதையோ அல்லது தோல்வியை எதிர்கொள்வதையோ பார்க்கும்போது சிலர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதைக் குறிப்பது தான் இந்த வார்த்தை. அதாவது, நமக்கு பிடிக்காத ஒருவர் துன்பத்தைச் சந்திக்கும்போது, நாம் வஞ்சத்தில் மகிழ்ந்து சிரிப்பது Schadenfreude. இதுபோல இனி யாருக்கும் செய்யாதீர்கள் என தனுஷுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.