தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 09.12.2015-ம் தேதி கொண்டிக்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் (83) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது கையில் இருந்த 2 மோதிரம், 1 4 பவுன் பிரேஸ்லெட்டையும் திருடிச் சென்றது தொடர்பாக அவரது சகோதரி மகள் ஜாய்ஸ் விக்டோரியா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், தாலுக்கா காவல் நிலையத்தில் ஆதாயக்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி குணசேகரன் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர் என்பதும், வீட்டில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார் என்பது தெரிந்து அவரிடம் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கின் தொடர் விசாரணையில் சரித்திர பதிவேடு (HS) குற்றவாளியான பட்டுக்கோட்டை, அண்ணாநகரைச் சேர்ந்த நாச்சிபழனி (32) என்பவரை காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினரால் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கில் புலன்விசாரணையை முடித்து நாச்சி பழனி மீது 01.02.2018-ம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கினை விசாரணை செய்த பட்டுக்கோட்டை, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி-3 வழக்கை விசாரித்து நாச்சிபழனிக்கு முறையே 5ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதத்தொகையும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராத தொகையும், ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராத தொகையும் விதித்து உத்தரவிட்டார்.