Skip to content
Home » 100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

100 மூட்டை அரிசியில் சாதம்…….கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிசேகம்

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இன்று  கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிசேகம் நடந்தது.

பிரகதீஸ்வரர்  கோவிலில் உள்ள பதிமூன்றரை அடி உயரமும், அறுபதுஅடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று 100மூட்டை அரிசியால் சாதம் சமைத்து

அன்னாபிஷேகம் செய்யபடுகிறது. லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர் சார்பில் ஒவ்வொரு வருடமும் அன்னாபிஷேகத்தினை கடந்த 38 வருடமாக செய்துவருகின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை முன்னிட்டு  ஏற்கனவே கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், மறுநாள் பிரகன்நாயகிக்கும் பிரகதீஸ்வரருக்கும் மகாபிஷேகமும், நடைபெற்றது.

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 100 மூட்டை அரிசியை 6 கொதிகலன்களில் நீராவியினால் சாதம் சமைத்து ஆறவைத்து காலை 8மணிக்கு பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய  துவங்கினர். மாலை வரை சாதம் அபிஷேகம் நடைபெறும். பின்னர் பலவிதமான பலகாரங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மாலை 5 மணி அளவில் மகாதீபாரதனை நடைபெறும். தீபாராதனைக்கு பின்னர் அபிஷேகம் செய்த அன்னத்தினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள சாதத்தினை அருகில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிப்பது வழக்கம்.  அன்னாபிசேகத்தில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டுள்ளனர். அன்னாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!