தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சென்றார். இரவில் அங்குள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய முதல்வர் இன்று காலை ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்கள் 15 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், டிஆர்பி ராஜா, எ.வ. வேலு, ஆ.ராசா எம்.பி. திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர் 11.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.