திருச்சி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் போதை மருந்துகளை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில்தனிப்படை போலீசார், நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் தங்கியிருந்த கர்நாடக மாநிலம் கோலார் வட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (42), திருச்சி மன்னார்புரம், ராஜராஜன் நகரைச் சேர்ந்த வினோத்குமார் (28), திருநெல்வேலி, வி.எம்.சத்திரம், டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்த ராமசாமி (42), சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பார்த்திபராஜ் (31), திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சுபீர் அஹமத் (37), மற்றும் மணிகண்டன் (23), சிஜூ (33), பாலசுப்பிர மணியன் (38)ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிரிண்டர்( Grindr) என்ற சமூக வலைதள செயலி மூலம் இணைந்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக, போதை மருந்துகளை உபயோகித்ததும், மேலும், அந்த சமூக வலைதள செயலியில் உள்ள நபர்களுக்கு போதை மருந்துகளை DTDC கூரியர் மூலமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த கூரியர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.கைதான 8 நபர்களிடம் இருந்த போதை மருந்தான மெத்தபெட்டமின், ஊசிகள், 16 கிராம் தங்க சங்கிலி, 5 கைப்பேசிகள், கேமிரா 1, மோடம் 2, சோடியம் குளோரைடு, ரூ.5,145 ரொக்கம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.