Skip to content
Home » இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Senthil

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் நோக்கில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசநாயகா உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இலங்கையில்  பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தேர்தலில் 1.17 கோடி பேர் வாக்களிக்க தகுதி  பெற்றிருந்தனர். தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில், பெரும்பான்மை இடங்களை  ஆளுங்கட்சியான,  அதிபர் அனுர குமார திசநாயகா தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது. தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி கட்சி. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது .

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகள் மற்றும் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளை மட்டுமே தற்போதைய நிலையில் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்களும், சிறப்பு பெரும்பான்மைக்கு 150இடங்களும் தேவை. சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சிறப்பு பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!