Skip to content
Home » ‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று ( வியாழன்)மாலை சென்னையிலிருந்து  விமானம் மூலம் புறப்பட்டு   இரவு 7 மணிக்கு திருச்சி வருகிறார். திருச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கார் மூலம் இரவு  8.45 மணிக்கு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திற்கு வருகை தர உள்ளார். அங்கு இரவு தங்குகிறார்.

நாளை 15.11.2024  காலை  9மணிக்கு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரின் மையப்பகுதியில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

9.15 மணிக்கு ஜெயங்கொண்டம்  மகிமைபுரத்தில் ஜெயங்கொண்டம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையினை சுமார் 130 ஏக்கரில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

காலை 10 மணிக்கு , திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி அவர்களை சராசரி ஊட்டச்சத்து நிறையுடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக மாற்றும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” எனும் உன்னதமான திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை முதல்வர் வழங்குகிறார்.

இத்திட்டத்தின் வாயிலாக 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.

10.30 மணிக்கு  அரியலூர் மாவட்டம்  கொல்லாபுரத்தில்  அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பிக்கிறார்.

அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்  முதலமைச்சர் ஸ்டாலின் விழாப் பேரூரை ஆற்றுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பெரம்பலூர் செல்லுகிறார். அங்கு  மதிய உணவுக்கு பின்னர்  மாலையில்  அரியலூர், பெரம்பலூர் மாவட்ட  திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.  இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *