ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (53). இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலைபார்த்து வந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரனுக்கு மனைவி ஜெயசிலா ராணி, மகள் பிரியாதர்ஷினி (23), மகன் ஜெயபிரகாஷ் (22) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5ம் அணி ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை சிறப்பு எஸ்ஐ பிரபாகரன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பிரபாகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் மயங்கி விழுந்துள்ளார். அவரை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் மீட்டு, ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே சிறப்பு எஸ்ஐ பிரபாகரன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பிரபாகரனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அங்கு மருத்துவமனையில் இருந்த சடலத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.