திருச்சியை சேர்ந்த விருமாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி நீர் உள்ளது. பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீரை எடுப்பது, மணல் அள்ளுவது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால் காவிரி ஆற்றை நம்பி உள்ள விவசாயப் பகுதிகளில் விவசாயம் குறைந்து விட்டது.
கடந்த 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவகங்கை கூட்டு குடிநீர் எனும் திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 86.5 மில்லியன் லிட்டர் நீர் இதற்கென காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நிலையில், கரூர் மாவட்டம், மருதூர் பகுதியில் தடுப்பணையை கட்டுமாறு மனு அளித்தோம்.
தடுப்பணை கட்டிய பின்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஆனால் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கவில்லை. ஆகவே கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் அதுவரை சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்றம். சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் ரமேஷ் மற்றும் மரியா கிளாட் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் இடையிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கடந்த 2018 ல் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுக் குடிநீர் திட்டம் செய்ய மனு கொடுத்திருந்தேன் அந்த மனுவின் அடிப்படையில் தமிழக அரசு ரூபாய் 1873 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கி தற்போது 90% பணி முடிந்து விட்டது எனவே நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது
இதனைத் தொடர்ந்து நீதிபகள் பல கோடி ரூபா ய் செலவழித்து மக்கள் நல திட்டம் செயல்படுத்தபடுகிறது. எனவே, மனுதாரர் தடுப்பணை கட்டுவது குறித்து புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம் என கூறி சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.