தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் ஆளுனர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சாவூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.
தொடர்ந்து அரசு குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திர மௌலிஸ்வார் சன்னதி வழிபாடு செய்ய சென்றார். அங்கே அவரை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்த ஆளுநரை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் வரவேற்றனர். சரஸ்வதி மஹால் நூலக ஒலி ஒளி காட்சியகத்தில் தஞ்சாவூர் சுற்றுலா தலங்கள், நவக்கிரக ஸ்தலங்கள், கல்லணை உட்பட பல்வேறு காட்சிகள் அடங்கிய திரைப்படத்தை 25 நிமிடங்கள் பார்வையிட்டார்.
பின்னர் தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு சென்றார். அங்கு அருங்காட்சியகம் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து 12.45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்றார். மாலையில் பெரியகோவிலில் நடைபெறும் பிரேதோஷ விழாவிலும் பங்கேற்கிறார்.