சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாயார் காஞ்சனா சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்நுநோய்க்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஒரு மாதத்திற்க மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி விக்னேஷ் இன்று டாக்டர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தினார். இதில் டாக்டர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விக்னேசும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு வந்து டாக்டரை பார்த்து நலம் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்தும் கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கத்தியால் குத்திய விக்னேசை போலீசார் கைது செய்துள்ளனர். டாக்டர் ஓ.பி. பார்க்கும் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கத்தியால் குத்தி உள்ளான். டாக்டருக்கு 7 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. டாக்டர் நலமுடன் உள்ளார்.
விக்னேஷ் தனது தாயாரை பார்க்க அடிக்கடி மருத்துவமனைக்கு வந்ததால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. கத்திகுத்துப்பட்ட டாக்டர் ஒரு இருதய நோயாளி. அவர் மிகவும் நல்ல பெயர் எடுத்த ஒரு மருத்துவர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.