தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார்.
அங்கு ஒரு விடுதியில் அறைஎடுத்து மாணவ, மாணவிகள், ஆசிரியர் பொன்சிங் ஆகியோர் தங்கினர். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் உறவினர்களுடன் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வி அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்,போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பள்ளி நிர்வாகத்திடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியரை பணியில் இருந்து நீக்கி விட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கிடையே ஆசிரியர் பொன்சிங் தலைமறைவாகி விட்டார். அவர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடன்குடிபள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் செய்யது அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரை திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.