திருச்சி- சென்னை பைபாசில் தினமும் சில இளைஞர்கள் ரேஸ் பைக்கில் சாகசம் செய்கிறார்கள். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை ஓட்டும் அந்த இளைஞர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் தன்னுடன் மேலும் 2 இளைஞர்களை முன்னும் பின்னுமாக உட்கார வைத்துக்கொண்டு முன் வீலை தூக்கிக்கொண்டு, ஒரு வீலில் பைக்கை ஓட்டுகிறார்.
மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் வாகனங்கள் அதிக அளவு செல்லும் பகுதியில்இந்த சாகசத்தில் ஈடுபடுகிறார். பஸ்சுக்காக இளம் பெண்கள் நிற்பதை பார்த்தால் அவர்கள் பிளையங் கிஸ் கொடுத்தவாறு மேலும் வேகத்தை கூட்டி ரோட்டில் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டியை ஓட்டுகிறார். இவரும், இவருடன் இருப்பவர்களும் ஹெல்மட்டும் அணிவதில்லை.
இந்த சாகச நிகழ்ச்சி ஒருநாள் இரண்டு நாள் மட்டுமல்ல தினமும் நடக்கிறது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். இவர்கள் சாகசம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு விட்டால்
ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
இந்த இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்திற்காக, யாரோ, எவரோ பாதிக்கப்படுவதா என பைபாஸ் பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பைக்கின் பதிவு எண் டிஎன் 81– சி5022. போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இதுபோல அஜாக்ரதையாகவும், விபத்து ஏற்படும் வண்ணம் வண்டி ஓட்டினாலும் சென்னையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நூதன தண்டனையும் வழங்கப்படுகிறது.
ஆனால் திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை இதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை இப்படியே விட்டு விட்டால் இன்னும் பலர் இப்படி கிளம்பி விடுவார்கள். எனவே பொது நலன் கருதி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கருத்து.