தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி துவக்கம் தந்தார். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார். மஹாராஜ் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். கோயட்சீ பந்தில் மார்க்ரமின் கலக்கல் ‘கேட்ச்சில்’ அபிஷேக் சர்மா (7) அவுட்டானார். ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில், இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 56 ரன் எடுத்தது. தனது விளாசலை தொடர்ந்த சாம்சன், 27 பந்தில் அரைசதம் எட்டினார். குருகர் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (21) வீழ்ந்தார். சாம்சன் தொடர்ந்து மஹாராஜ், பீட்டர் பந்துகளில் இமாலய சிக்சர் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. சைம்லேன் ஓவரில் சாம்சன் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 18 ரன் கிடைத்தன. மஹாராஜ் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட சாம்சன், 47 பந்தில் சதம் எட்டினார். மஹாராஜ் வலையில் திலக் வர்மா (33) சிக்கினார். பீட்டர் பந்தை துாக்கி அடித்தார் சாம்சன். எல்லையில் ஸ்டப்ஸ் சாமர்த்தியமாக பிடிக்க, 107 ரன்னுக்கு (50 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா (2), ரிங்கு சிங் (11) நிலைக்கவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன் குவித்தது. அர்ஷ்தீப் (5) அவுட்டாகாமல் இருந்தார். கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. கேப்டன் மார்க்ரம் (8), ஸ்டப்ஸ்(11), ரிக்கிள்டன் (21) விரைவில் வெளியேற 6 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்து தவித்தது. வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவரில் (12வது) ‘ஆபத்தான’ கிளாசன் (25), டேவிட் மில்லர் (18) நடையை கட் டினர். ‘டெயிலெண்டர்கள்’ பிஷ்னோயிடம் ‘சரண்டர்’ ஆகினர். தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். நேற்று அசத்திய சாம்சன், சர்வதேச ‘டி-20’ அரங்கில் தொடர்ந்து இரு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக 111 ரன் (ஐதராபாத், 2024) எடுத்திருந்தார். மேலும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ‘டி-20’ போட்டியில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரரானார் சாம்சன் (47 பந்து). இவர், சூர்யகுமார்(55 பந்து, ஜோகனஸ்பர்க், 2023) சாதனையை தகர்த்தார்.