தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தலைமையில் பொதுமக்கள் தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.பிரபு தலைமையில் காமராஜ நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் சாலை அகலப்படுத்துவதற்காக மிக சிறிய அளவில் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் கலவை கொட்டப்பட்டு பணிகள் நடக்கிறது. இந்த கலவையும் தரமற்ற முறையில் உள்ளது. இவ்வாறு சாலை அமைக்கப்பட்டால் மழைக்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதி. இதில் இவ்வாறு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலைப்பணிகள் எப்போது தொடங்கியது, முடிவடையும் காலம், திட்ட மதிப்பீடு போன்ற திட்டம் குறித்த அறிவிப்பு பலகை எங்கும் வைக்கப்படவில்லை. எனவே இப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.