Skip to content
Home » ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Senthil

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, போலீஸ் அதிகாரிகள் பலர், பலத்த காயம் அடைந்தனர். இவ்வாறு காயமடைந்த போலீஸ் பெண் அதிகாரி அனுசுயா ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின், ராஜிவ் கொலையாளிகளுக்கு துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ராஜிவை கொன்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என, கவர்னர் ரவியை சந்தித்தும் முறையிட்டார். ஆனாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்; இதனால், மிகவும் சோர்ந்து போனார். இதற்கிடையில், விடுதலை புலிகள் பெயரைச் சொல்லி, பலரும் அவருக்கு மிரட்டல்கள் விடுத்தனர். அதனால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அனுசுயா கூறியதாவது: ராஜிவை கொல்வதற்காக விடுதலை புலிகள் நடத்திய குண்டு வெடிப்பில், என் இடது கை முழுமையாக பாதிக்கப்பட்டது. என்னை போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட ராஜிவ் குடும்பத்தினர் எங்களுக்கு ஆதரவாக இருப்பர் என்று நினைத்து, காங்., கட்சியில் சேர்ந்தேன்.

ஆனால், கொலையாளிகள் மீது ஆத்திரம் காட்ட வேண்டிய ராஜிவ் குடும்பத்தினர், ஆதரவும், பரிவும் காட்டத் துவங்கினர். வேலுார் சிறையில் இருந்த நளினியை, சிறைக்கே சென்று சந்தித்தார் பிரியங்கா. என்ன நடந்தது என்ற உண்மையை அறிய போனார் என்று சொன்னார்கள். என்னை போன்றவர்களும் நம்பினோம். ஆனால், கேரள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவுக்கு ஆதரவாக, ராகுல் பிரசாரம் செய்யும் போது, வேலுார் சிறைக்கு சென்று, நளினியை பிரியங்கா சந்தித்தது குறித்து பேசியுள்ளார். நளினிக்காக, தானும் குடும்பத்தினரும் மன வேதனைபட்டதாக தெரிவித்திருக்கிறார். கொலையாளிக்காக பரிந்து பேசும் ராகுல், பிரியங்கா ஆகியோர், குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. என்னை போன்ற பாதிக்கப்பட்டோரையும் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. கொலையாளிகளோடு கைகோர்த்து செயல்படுவது போல நடக்கின்றனர். zஒட்டுக்காக காங்கிரஸ் இப்படி பேச ஆரம்பித்து விட்டது. இனி அவர்களை நம்பி,  அக்கட்சியில் இருந்து பிரயோஜனம் இல்லை. எனவே, அக்கட்சியில் இருந்து விலகி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!