புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது . இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் கந்த சஷ்டி விழாவானது கடந்த 2-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் செய்து காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. அதனையொட்டி நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளிக்க பிரம்மாண்ட எல்.இ.டி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பால் இனிப்பு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் ஆவின் தலைவர் விராலிமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் S.பழனியாண்டி , மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, விராலிமலை தெற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், விராலிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நாளை (சனி கிழமை) முருகன் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண ஊர்வலமும் 10-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) பள்ளியறை ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழாவானது நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 12 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சி கண்டுகளிக்க பிரம்மாண்ட எல்.இ.டி டிவியில் ஒளிபரப்பப்பட்டது .