திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில் நான் வேலை செய்தபோது, அவரது உறவினரான இலங்கை தமிழர் இளங்கோ (எ) ஜானி(50) அறிமுகமானார். கடந்த 2019ம் ஆண்டு அவர் லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை சரக்கு பொருட்களை கொள்முதல் செய்து லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறும் என்னிடம் உதவி கேட்டார்.
துபாயிலும் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய்க்கு அழைத்தார். உரிமம் பெறுவதற்காக கடந்த (27.8.2022, 28.8.2022) ஆகிய 2 நாட்கள் நான் துபாய் சென்று திரும்பினேன். அங்கு நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ (எ) ஜானி போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இளங்கோ என் கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச புகைப்படங்களை என் கணவருக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டினார். இதனால் நான் கடந்த 21.7.2024 விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். எனது கணவர் என்னை காப்பாற்றினார். அப்போது, என் கணவரிடம் நடந்ததை கூறினேன். மேலும் ஜானி எனது கணவர் தொலைபேசி எண்ணையும், அவரது உறவினர் தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு வாட்ஸ் ஆப் செயலியில் குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறார். மேலும் என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் கூறி லண்டனிலிருந்து மிரட்டி வருகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு முசிறி பெண் புகாரில் கூறி உள்ளார். அதன் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண்ணை செக்ஸ் பிளாக்மெயில் செய்து வரும் இளங்கோ என்கிற ஜானி நாம் தமிழர் கட்சி நிர்வாகி எனக் கூறப்படுகிறது.