திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை நீடிக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை மழை இல்லை நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இன்று மழை பெய்தது. அதே நேரத்தில் தஞ்சையில் இன்று காலை 10 மணி வரை மேகமூட்டம் காணப்பட்டது. ஆனால் மழை இல்லை.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இன்றும் மழை தொடர்கிறது. நவ.13-ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.