நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை
கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர் வழக்கறிஞர்
தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று
கடந்த 14. 10. 2024 சீமான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான்தோன்றிமலை போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று, சீமான் மீது தான்தோன்றிமலை போலீசார், அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணைய தளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தெரிவித்தார்.