அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கிராமின்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), தேசிய கிராம சுயாட்சி திட்டம், முன்மாதிரி கிராமத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்ய கிராமின் கௌசல்ய யோஜனா, 15-வது தேசிய நிதிக்குழு மானியம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் – நகர்ப்புறம்), தூய்மை பாரத இயக்கம், நகர்ப்புறம், அம்ரூட் 2.0, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், நில அளவை ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண் வள அட்டை, பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், உழவர் கடன் அட்டை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், மின்-தேசிய வேளாண் சந்தை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தேசிய நல குழுமம், அனைவருக்கும் கல்வி இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், பிரதான் மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா ஒவ்வொரு கிராமத்திற்கும் பொது சேவை மையம் மூலம் பொது இணைய சேவை வழங்கும் திட்டம், உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள் நெடுஞ்சாலை, பிரதான் மந்திரி கனிச் ஷேத்ரா கல்யாண் யோஜனா, மாவட்ட தொழில் மையம், சுகம்யா பாரத் அபியான், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம், தேசிய கால்நடை இயக்கம் – கால்நடை காப்பீட்டுத் திட்டம், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம், சிறுபான்மையினர் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, கேலோ இந்தியா, வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, நில அளவைத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பொது சுகாதாரம், கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அஞ்சலகத் துறை, நெடுஞ்சாலைத்துறை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திட்டங்களின் செயல்பாடு, திட்டங்களின் முதன்மை குறிக்கோள்கள், நிதி ஆதாரங்கள், நடப்பு ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பணிகள் விவரம், நிலுவை பணிகள் விவரம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள பணிகளின் விவரம், வங்கி கடன் இணைப்பு பெற்ற விவரம், ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் எனவும் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெற வாய்ப்பாக அமையும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, அரியலூர் ஒன்றியக் குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.