தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். அவருக்கு கோவை மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது ஏராளமான மக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அப்போது பொற்கொல்லர்கள் சங்கத்தினரும் தங்களுக்கான தேவை, அரசின் உதவி தேவை என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை கோவையில் நகை தயாரிக்கும் பெற்கொல்லர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனிக்கு சென்றார். அங்கு தங்க நகை செய்யும் பட்டறைக்கு சென்று அங்கு அமர்ந்து நகை செய்யும் தொழிலாளியிடம் நகை செய்யும் தொழிலுக்கான பிரச்னைகள், அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என கேட்டார்.
அப்போது, கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழுமத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா முதல்வரிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கையுடன் இருங்கள், அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.
தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரத்திலேயே பொற்கொல்லர்கள் பட்டறைக்கு நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முதல்வர் இப்படி அதிரடியாக இங்கு வருவார் என பொற்கொல்லர் சங்கத்தினரே எதிர்பாராத நிலையில் முதல்வர் அங்கு சென்றது அந்த சங்க நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த சங்கத்தினர் முதல்வருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது அந்த வீதியில் பெண்கள் ஏராளமானோர் திரண்டு நின்று முதல்வரை வரவேற்று செல்பி எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.